Sunday, July 19, 2020

இறுதிப்பயணம்

இறுதிப்பயணம்

V.S. செல்வன்

 

அவன் கண்விழித்து தன் கைக்கு அருகில் கிடந்த நீண்ட மூங்கில் குச்சியை எடுத்தான். பக்கவாட்டில் மறைவுக்காக தொங்கிக்கொண்டிருந்த கோணிச்சாக்கை குச்சியைக்கொண்டு தூக்கிப் பார்த்தான் இன்னும் விடியவில்லை. அம்மா வருவாளா? கடைசியாக வந்து இருபதுநாளாவது இருக்கும். அவன் உடல் அழுக்குப்படிந்து உடலெங்கும் கடுமையான அரிப்பு எடுத்தது, நெஞ்சுக்குகீழ் ஏதோஒன்று படுக்கையில் கிடந்து ஒருவாரமாக குத்திக் கொண்டிருக்கிறது. அவன் கைகளை ஊன்றி எவ்வளவோ முயன்றும் அவனால் அதை எடுக்கமுடியவில்லை. நீண்ட பெருமூச்சு விட்டு அமைதியானான் தன்னால் அனைவருக்கும் எவ்வளவு துன்பம் என நினைத்தபோது அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன் கைக்கு சற்று தூரத்தில் இருந்த சாப்பாட்டுத் தட்டை குச்சியால் தட்டித்தட்டி இழுத்துத் தன் முகத்தருகே வைத்துக்கண்டான். இடுப்பை ஒட்டிய படுக்கையில் கழுவிவைத்த சொம்பை வலது கையில் தடவி எடுத்து தலைக்குப் பக்கவாட்டில் இருந்த வாளியில் சொம்பை விட்டு நீரை அள்ள முயன்றான். தண்ணீர் அடியில் இருந்ததால் கையை ஆட்டி ஆட்டி ஒருவாராக அரை சொம்பு அளவிற்கு தண்ணீரை எடுத்தான். தன் தலைக்கு மேல் கீற்று கூரையின் இறக்கத்தில் கீற்றுகளிடையே சொருகியிருந்த பல் பொடியை எடுத்து பல்லை விளக்கி தட்டில் துப்பி அதிலேயே முகத்தையும் கழுவிக்கொண்டான். அவனுக்கு முன்னால் தொங்கிய பல துணிகளில் முகம் துடைக்கும் துணியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். முகம் சவரம் செய்யப்படாமல் தலை முடி காடு போல் வளர்ந்து பிசுபிசுப்பாக இருந்தது.

          அவன் குடிசை தெருவின் வலப்புறத்தில் நடுப்பகுதியில் இருந்தது. வீட்டைச்சுற்றிலும் கருவேல முட்கள் வளர்ந்து இவன் குடிசை மட்டும் தனியாக முன்னே நீண்டிருந்தது. தெருவாசிகள் யாரும் அவன் குடிசை அருகில் வருவதில்லை. காரணம் கடுமையான வீச்சம் அடிக்கும். மற்றொன்று அவன் குடித்துவிட்டுச் சத்தம் போடுவான் இருப்பினும் சிலர் அவ்வப்போது கருணையோடு சில உதவிகளை செய்து வந்தனர். அவன் கொடுக்கும் ஐம்பது பைசாவுக்காக மகாலிங்கத்தின் கடைசிமகள் தன் வீட்டிற்கு டீ வாங்கச் செல்லும்பொழுது அவனுக்காக வாங்கி கொடுப்பாள். பாஞ்சாலை அம்மா அவனுக்கு ஒருவாளி தண்ணி எடுத்துக் கொடுப்பாள். அந்த ஒருவாளித் தண்ணீரில்தான் பாத்திரம் கழுவுவது பல் துலக்குவது என்று ஒரு நாள் முழுக்க ஓடும். மற்றபடி யார்வீட்டிலாவது நல்லது பொல்லது செய்தால் இலையில் வைத்துத் தள்ளிவிட்டுப் போவார்கள். அவன் அம்மா வந்தால்தான் அவனால் மலம் கழிக்க முடியும். கவிழ்ந்து படுத்த நிலையில் கடதாசியில் கட்டி அதைத் தூர எறிவது மிகவும் சிரமம். அந்த ஒரு கணத்தை நினைக்கும்பொழுது அவனால் சாப்பிடவே முடியாது. எதை வாயில் வைக்கும் பொழுதும் அடுத்த நாள் ஞாபகம் தான் அவன் கண்ணெதிரே வந்து போகும். தூக்கு கூஜாவைத் தூக்கிக்கொண்டு மகாலிங்கம் மகள் அவன் குடிசைக்கு வெளியே நின்றபடி மூக்கைப் பொத்திக்கொண்டு மாமா காக்கா மாமா….. என்றாள் அவனை அனைவரும் காக்கா காக்கா என்றே அழைப்பார்கள். அவன் அண்ணனைப் பெரியகாக்கா என்றும் இவனைச் சின்ன காக்கா என்றும் அழைப்பார்கள். தன்னை ஏன் காக்கா என்று அழைக்கிறார்கள் என்பதை அவன் ஒரு நாளும் நினைத்து பார்த்தது கூட கிடையாது. அவள் சத்தத்தை கேட்டதும் அவன் வா.. தாயி உன்னத்தான் பாத்துக்கிட்டு இருந்தேன் என்று குப்புறக் கவிழ்ந்துகிடக்கும் அவன் உடலை இடக்கையை ஊன்றித்தூக்கி  நெஞ்சுப்பகுதியில் தலையணையாக வைத்திருந்த அந்த அழுக்கடைந்திருந்த தலையணையின் உறையில் வலக்கையை நுழைத்து ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினான். இடதுகை அவன் உடல் பாரம் தாங்காது நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் காசை வாங்கிக் கொண்டதும் சொம்பு என்றாள். அவன் சொம்பைக் கொடுத்ததும் வாங்கிக்கொண்டு அவள் அம்மா பார்க்கிறாளா என்று நோட்டமிட்டு ஒரே பாய்ச்சலாக ஓடிப்போனாள்.

அப்போது அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்த அவன் அம்மாவோடு மில்லில் வேலைசெய்யும் ஜோதிவேலை நோக்கி மில்லுகார மாமா, என்று அழைத்தான். அவர். வேறு வழியின்றி என்ன மாப்ள  என்றார்.  மாமா உடம்பெல்லாம் ஒரே அரிப்பா இருக்கு வெண்ணி வச்சு உடம்பதொடைக்கணும் இருபது நாளுக்கு மேல ஆச்சு எங்க அம்மாவ பார்த்து வர சொல்லுங்க மாமா என்றான். சொல்றேன் மாப்பிள்ளை என்று நகர்ந்து சென்றார் அவர் சென்றவுடன் தன் படுக்கையை ஒட்டிய வலதுபுறததில் நெருப்பெறும்புகள் சாரைசாரையாகச் செல்வதைப் பார்த்தான். கண்களை கூர்மையாக்கி அதன் வழித்தடத்தின் எதிர்திசையில் கண்களை ஓட விட்டான் அவன் இடுப்புப்பகுதி வரை மட்டுமே அவனால் தலையைத் திருப்பிப் பார்க்கமுடிந்தது. அதையும் தாண்டி அவை தொலைவிலிருந்து வந்துகொண்டிருந்தன. நெருப்பெறும்பு என்றாலே அவனுக்கு பயம் உணர்ச்சியற்ற அவன் உடலை அவை எப்போதும் தின்று தீர்க்கின்றன. கையில் குச்சியை எடுத்து தட்டி கூரையில் சொருகி இருந்த எறும்பு மருந்தை எடுத்துக்கையில் வைத்துக்கொண்டான். அவள் சொம்பின் மேல் கவிழ்த்த துண்டு வாழை இலையுடன் தன் கை விரல்களை அகலவிரித்துத் பிடித்தபடி டீ சொம்பை அவனிடம் நீட்டினாள். அவன் ஆயி நெருப்பெறும்பு ஊறுது அது எங்கன்னு பார்த்து இந்த மருந்தை போட்டுட்டு போயிறு தாயீ”  என்றான். அவள் சற்றே அசூயையுடன் அவன் மேல் பரிதாபப்பட்டு மூக்கில் கைவைத்தபடி எங்க என்றபடி கவிழ்ந்துகிடந்த அவன் உடலை நோட்டமிட்டாள். குப்புறப்படுத்து நெஞ்சில் தலையணை வைத்திருக்கும் அவன் இடுப்பைச்சுற்றி சிறிய துணி மட்டும் போர்த்தப்பட்டிருந்தது பிறண்டு கிடக்கும் கால் முட்டிக்கு அடியிலிருந்து எறும்புகள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தன. சூம்பிக் கிடக்கும் அவன் கால்கள் பயன்படுத்தப்படாத்தால் எலுப்புகள் விரைத்துக்கொண்டு  கால்விரல்கள் முறுக்கிக்கொண்டு கட்டைபோல் கிடந்தன. எறும்பின் தடங்களை தொடர்ந்து நோட்டமிட்டுகொண்டே சென்றாள் அவை கணுக்காலுக்கு மேல் எலும்பின் அடியிலிருந்து சதைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தன கால் முழுவதும் அவைக் கடித்துக்கடித்து நெருப்பில் சுட்டது போல் சிவந்து திட்டுத்திட்டாக அவன் கால்கள் கிடந்தன. அவள் ஒருவழியாக மூக்கை பொத்திக்கொண்டு கால்களில் மருந்து போட்டாள் எறும்புகள் உடலை சுறுக்கிக்கொண்டு விழுந்தன. அதற்குமேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை டீ ஆறிப்போனா அம்மா சத்தம் போடும் என்று கூறி ஒரே ஓட்டமாக ஓடிப்போனாள். எதிர் வீட்டு சாமிய்யா கடைத்தெருவிலிருந்து அப்போதுதான் வந்திருந்தார் சாமியாண்ணே என்று கத்தினான். என்னடா என்று அவர் திரும்பிக் கேட்டார். எங்க அம்மாவ பாத்தியா? வந்து இந்த உடம்ப தொடைச்சு விட்டு போனா என்னண்னே. நெருப்பெறும்பு கால்ஃபுல்லா கடிச்சிடுச்சு துணியை மாத்தணும் எவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுது பாத்தியாண்ணே. தனியாதானே கிடக்குறேன் வந்து ஒரு உதவி செய்யக்கூடாதா அந்த பொம்பள என்று அலுத்துக் கொண்டான். ஏய் அதுக்கு ஒருவாரமா மேலுக்கு முடியலையாம் நீ நல்லாயிருந்த்தப்ப அவளுக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தியிருப்பியா ஊட்ல கூட வச்சிக்காம மில்லுலேயே தங்கவிட்டுட்டே, நல்லா இருந்தா வராதா? அதுக்கு என்னன்னு யாருக்குத் தெரியும். என அவர் கூறியதும். மேற்கொண்டு பேசமுடியாமல் மொளனமாகிப்போனான்.

முனியம்மாவிற்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அரிசி மில் டிரைவர் இவன் இரண்டாவது. முனியம்மாவின் புருஷன் குடிகாரன் குடித்து குடித்து அனைத்தையும் அழித்து செத்துப்போனபின்  தன் இரண்டு மகன்களுடன் அரிசி மில்லுக்கு வேலைக்கு போனவள் அங்கேயே அவர்களை நெல் மூட்டைகளுடன் தங்க வைத்துக் கொண்டு வேலை பார்த்தாள். மூத்தவன் வளர்ந்து பெரியவனானதும் அரிசி மில் டிரைவரானான் பிறகு அவனுக்குத் திருமணம் ஆனபின் அவனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று இருவரும் மில்லிலேயே தங்கிக்கொண்டார்கள். முனியம்மாவின் நேர்மைக்காகவும் அவ்வப்போது நடக்கும் நெல்திருட்டைத் தடுக்கவும் அவர்கள் அங்கு தங்கியிருப்பது அவள் முதலாளிக்கு வசதியாக இருந்தது. மேலும் முனியம்மாவின்மேல் தனிப்பட்ட கருணையையும் அவருக்குண்டு. அவர் மில்தொழிலைத்தாண்டி  ரோட்டோரத்தில் கிடந்த பத்து ஏக்கர் நிலத்தில் பன்னீர்செல்வம் என்ற டீலக்ஸ் தியேட்டரை கட்டியிருந்தார். டூரிங் தியேட்டரில் படம் பார்த்தவர்கள், நாற்காலி போட்டு படம் காட்டியவுடன் இவரது தியேட்டரில் கூட்டம் அள்ளியது. தியேட்டர் தொழில் அவருக்குப் பெருமையாகவும் இருந்தது. முனியம்மாவுக்கு இரண்டு இடத்திலும் வேலை கொடுத்திருந்தார். தியேட்டர் கூட்டுவது, பெண்கள் கழிவறையைப் பராமரிப்பது.

திருக்காட்டுப்பள்ளி ரோட்டில் புதுத்தெருவுக்கு நுழையும் இடத்தில் உள்ள புளியமரத்தடியில் ஒரத்தூரிலிருந்து வந்த ராதா டீக்கடை தொடங்கினார். அவர் வருகைக்கு முன் தெருவாசிகள் டீ குடிக்க வடக்கே சேவுசெட்டியார் கடை அல்லது தெற்கே ரயிலடிக்குத்தான் செல்லவேண்டும். சுமார் ஒன்னரைக் கிலோமீட்டர் நடந்து சென்று டீ குடித்து வந்தவர்களுக்கு ஒரத்தூரார் கடை வந்ததும் அங்கேயே அனைவரும் டீ குடிக்க தொடங்கினார்கள். காலைவேளையில் அவர் கடைக்கு அருகில் இருக்கும் பட்டுக்கடையில் வெற்றிலை சீவல் வாங்கிக்கொண்டு அவர் கடையில் டீ குடித்துவிட்டு வயல் வேலைகளுக்கு செல்வது வழக்கம். புளியமரத்தடியில் அனைவரும் குடும்பம் குடும்பமாக சுத்தி அமர்ந்தபடி டபராவில் டீ ஆர்த்தி குடித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் சொம்பு, கூஜாக்களில் பார்சல் வாங்கிச் செல்வார்கள்.  அவர் பாய்லரில் எப்போதும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும். அன்று காலை முனியம்மாவும் டபராவில் டீ வாங்கி சேகருடன் ஆளுக்கு ஒரு மிடறு குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் அம்மாவிடம் தான் தியேட்டரில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தெரிவித்தான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை அவன் சிறுவனாக இருந்தபோது பழைய டூரிங் தியேட்டரில் சிகரெட் அட்டை பொறுக்கப்போகும் பொழுது இரண்டு பெரிய சக்கரங்கள் போல் இருக்கும் அந்த ஆப்ரேட்டர் அறையிலிருந்து பளிச்சென்ற ஒளியில் பெரிய அளவில் தெரியும் படத்தை கண்டு இதே போலத்தானும் படம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. அவளும் சற்று யோசித்து தியேட்டர் வேலை என்றால் அவனுக்கு திருமணத்திற்கு நல்ல பெண்ணாகக் கிடைக்கும் என்று எண்ணினாள். அன்று காலையிலேயே முதலாளி தியேட்டருக்கு வந்திருந்தார். பெரியஅளவில் உள்ள வெங்கடாஜலபதி படமும், என்னைப்பார் யோகம் வரும் எனும் இருகழுதைகள் படமும் மாட்டப்பட்ட அறையில்,  சுழல் நாற்காலியில் அமர்ந்து கலெக்க்ஷன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். முனியம்மா மெதுவாக சாமி என்றாள். முதலாளி டிராயரில் பணத்தை வைத்து விட்டு என்ன முனியம்மா உள்ளே வா என்றார். என்ன ஏதும் உடம்பு சரியில்லையா என்றார். இல்லசாமி சின்னபய தேட்டருலவேலபாக்கணுங்கிறான் என்று இழுத்தாள். அதற்கு அவர் அவன் மில்லுல நல்லாதானே வேலபாக்குறான் நல்லபடியாக சம்பாதிக்கிறான் என்றார். சாமி அவனுக்கு கல்யாண வயசாயிடுச்சு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன் தியேட்டர்ல வேலன்னு சொன்னா நல்ல பொண்ணா கிடைக்கும்  என்றாள். அவளுடைய வார்த்தையை அவரால் தட்ட முடியவில்லை. எனவே நீண்ட யோசனைக்குப்பிறகு  சரி அவன வர சொல்லு என்றார். அவள் வேகமாக வெளியே சென்று சின்னபயலே.... சேகரு... என்று அழைத்தாள். அவன் வேகமாக ஓடி வந்து துண்டை கக்கத்தில் வைத்து வணக்கம் சாமி என்றான். டேய் உங்கம்மாவுக்காக டிக்கெட் கிழிக்கிற வேலைதர்றேன் எவனாவது மாமா மச்சான் தெரிஞ்சவன்னு டிக்கெட் இல்லாம உள்ள விட்டே கட்டிவச்சுத்தோலை உரிச்சுபுடுவேன் இன்று கடுமையாக கூறினார். இல்லசாமி அப்படியெல்லம் இருக்கமாடேன் சாமி என்று கும்பிட்டான். அன்று மாலை அவனுக்கு புதுக்கைலியும் நல்ல அண்ட்ராயரும் ஓட்டை வச்ச முண்டா பணியனும் புதிதாக வாங்கிக் கொடுத்தாள் முனியம்மா. அன்று முதல்நாள் வேலை பெண்கள் கவுண்டரில் டிக்கெட் கிழிப்பது இவன்வேலை பெண்கள் கூட்டம் அலைமோதியது. அந்த இரண்டு அடி அகலத்தில் நீண்டு கிடக்கும் அந்த டிக்கெட் கவுண்டரில் தகரக்கதவை திறந்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி பெஞ்சு பக்கம் கதவில் நின்று டிக்கெட் கிழிக்கவேண்டும். பலவித பெண்கள் புடைசூழ டிக்கெட்கிழிக்கும் அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. முனியம்மா ஒருவராக கோயிலடியில்  சென்று இவனுக்குப் பெண் பார்த்தாள். இவனை விட அவள் ஐந்து வயது சிறியவள் பார்ப்பதற்கு நல்ல சிவப்பாக, சினிமா நடிகை மாதிரி இருந்தாள். அம்மன் கோயிலில் சிறிய அளவில்  தாலிகட்டிக்கொண்டு, தெருவின் மையப்பகுதியில் கிடந்த பொறம்போக்கு நிலத்தை ஒட்டிய இடத்தில் இருவரும் ஒரு சிறிய குடிசை போட்டுக்கொண்டு குடும்பம் நடத்த தொடங்கினர். அவன் எப்போதும் பொண்டாட்டிய கீழே இறக்கி விடுவது இல்லை என்று ஊரார் பேசும் அளவிற்கு அவளை வைத்துத்தாங்கினான். அடிக்கடி அவளை தஞ்சாவூர் அழைத்து செல்வது ஹோட்டலில் சாப்பிடுவது என்று மிக சந்தோசமாக அவளை வைத்திருந்தான் இருந்தாலும் அவன் சினேகிதர்கள் யாரையும் அவன் திருமணம் ஆனதிலிருந்து கூப்பிடுவதில்லை தள்ளுவண்டி பட்டாணி பாண்டி, வெங்காய மண்டி குரு, இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்ணு மண்ணாகத் திரிந்தவர்கள். அவர்கள் தன் வீட்டுக்கு வந்தால் தன் மனைவி கைமாறி விடுவாளோ? என்ற அச்சம் அவன் மனதில் ஆணியாக தைத்து இருந்தது. அதற்குத் தன் மனைவி மிகவும் அழகாக இருப்பது ஒரு காரணம். அவர்களை வெளியில் தியேட்டரில் சந்தித்து பேசுவதோடு சரி. சேகர் அவளிடம் ஒரு விஷயத்திற்கு கடுமையாக கோபப்படுகிறான் என்றால் அது அடுத்த ஆடவனிடம் அவள் பேசும்போதுதான். முனியம்மாவையும் வெறுப்புடன் நடத்தி அவளை வீட்டுப்பக்கம் வராதவாறு பார்த்துக் கொண்டான். அவளும் அவர்கள் நல்லாயிருக்கட்டும் என்று மில்லிலேயே தங்கிக்கொண்டாள். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் கூட அவன் வந்து பார்க்கவில்லை என்பது அவளுக்குக் கவலையாக இருந்தது. தன் எதிர் வீட்டு சாமிய்யா அண்ணனிடம் அஞ்ச,பத்த கொடுத்து விடுவான் முனியம்மா ஒருமுறைகூட அதை வாங்கியதில்லை.

அன்று வழக்கம்போல் இரண்டாவது ஆட்டம் முடித்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தியேட்டர் வாசலில் இருந்து தார் ரோடு வரை மணல் சாரி. சைக்கிள் எவ்வளவு மிதித்து அழுத்தினாலும் சக்கரம் நகராமல் வளைந்து நெளிந்து ஆளைத்தள்ளிவிடும் வண்டி நகரவே நகராது ஆனால் அவன் ஒவ்வொரு நாளும் சைக்கிளில் ஏறி மிதித்து கால்களை ஊன்றிவிடாமல் எப்படியாவது சைக்கிளை ஓட்டி விடுவான். அன்று புதுப்படம் போட்டிருந்ததால் கும்பல் அதிகம். ரெண்டாம் ஆட்டம் டிக்கெட் கிழித்து களைப்படைந்து போயிருந்தால் முண்டா பனியன் அனைத்தும் தொப்பலாக நனைந்து போயிருந்தது தன் மனைவியும் காத்திருப்பாள் என்ற எண்ணமும் அவனை விரைவாக வீட்டிற்குச்செல்லத் தூண்டியது. ஒருவழியாக மணல்சாரியை முண்டி மிதித்து வெளியேறினான், தார்ரோடு தரையை விட சற்று உயரமாக இருந்தது எலெக்சன் வருவதால் தற்போதுதன் குண்டும் குழியுமாக இருந்த ரோட்டை ஜல்லி போட்டுத்திருத்தி ரோடுரோலர் விட்டு சமப்படுத்தி இருந்தார்கள். இருந்தாலும் ரோட்டின் ஓரப்பகுதிகள் மண்ணைப் போட்டு சமப்படுத்தாமல் ரோட்டின் ஓரத்தில் தார் பட்டும்படாமலும் ஜல்லிகள் கத்தி மாதிரி நீட்டிக் கொண்டிருந்தன. இருட்டு நேரம் என்பதால் சைக்கிளை நிதானமாக தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தான். மண் ரோட்டில் இருந்து தார் ரோட்டுக்கு சைக்கிளை ஏற்றும் பொழுது தார்ரோடு சற்று உயரமாக இருந்ததால் சீட்டை விட்டு எழுந்து நின்று வலுவெல்லாம் ஒன்று சேர்த்து சைக்கிளை மிதித்தான். சைக்கிள் தடுமாறி முன் சக்கரம் மட்டும் ரோட்டில் ஏற, பின் சக்கரம் ஏற முயலும்போது நீட்டிக் கொண்டிருந்த ஜல்லியில் இடறி நிலைதடுமாரி விழுவதற்கும் லோடு லாரி விரைவாக வருவதற்கும் சரியாக இருந்தது. லாரி ஒரே அடியாகஅடித்து சைக்கிளை தூக்கியெறிந்தது அவனை சற்று தூரம் இழுத்துச் சென்று ஒரு சுழற்று சுழற்றி இடுப்பை ஒரு அடி அடித்து ஓரத்தில்  தூக்கியெறிந்தது. ரோட்டில் கடையடைத்துத் திரும்பியவர்கள் பார்த்து தகவல் சொல்லி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். கண் முழிக்க மூன்று நாள் ஆகியது இடுப்பு பகுதியில் தண்டுவடத்தில் எலும்புகள் நொறுங்கி போயிருந்ததால் இடுப்புக்குக் கீழ், கட்டைபோல் சுரணையற்றுக்கிடந்தது. ஆஸ்பித்திரியில் இனி ஒன்றும்முடியாது என்று வீட்டுக்குத் தூக்கிச் செல்ல சொல்லிவிட்டார்கள். அவன் குடிசைத்திண்ணையில் படுக்கை விரித்து ஒரு ஓரமாக கிடத்தப்பட்டு இருந்தான். அடிபட்ட காசு கோர்ட்டில் இருந்து வந்தால் ஒருவேளை தள்ளு வண்டியில் உட்கார்ந்தபடி கையில் தள்ளிக்கொண்டு செல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். என்ன நடந்தது என்பதை அவனால் யூகிக்கவே முடியவில்லை. தான் இவ்விதம் இருப்பதை அவனால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை மனம் துடிப்புடனும் இடுப்புக்கு கீழே உடல் செத்துப் போயும் கிடந்தது. யாரைப்பார்த்தாலும் நாநல்லாயிருவனா? என்றே கேட்டுக்கொண்டிருப்பான். அவனுக்கு அடிக்கடி கோபமாக வந்தது அனைவரையும் திட்டி தீர்த்தான். அவன் மனைவி கண்ணீர் விட்டு பார்த்தாள். பல கோயில்களுக்கு நேந்துகொண்டு போய்ப்பார்த்தாகிவிட்டது ஒன்றும் பலனில்லை, இது தீர கூடிய நோயல்ல என்பது புரிந்ததும் தன் வாழ்க்கையே வீணாகிப் போனது போல உணர்ந்தாள். இருப்பினும் அதை அவள் காட்டிக் கொள்ளாது முழுமையாக ஆறு மாதங்களை கடத்தியிருந்தாள். அவன் இயலாமையுடனும் மனவேதனையுடனும் வளர்ந்துவிட்டிருந்த சந்தேகப்பார்வையும் அவளை வேசி என்றே எண்ணவைத்த காரணத்தால் அவனோடு வாழமுடியாமல் தன் தாய்வீட்டுக்கு போனவள்தான் திரும்ப வரவே இல்லை. அவன் அம்மா முனியம்மா எப்போதாவது வந்து அவனை துடைத்துவிட்டு துணி மாற்றி விட்டுச் செல்வாள். அவனின் இந்த மோசமான நிலையுடனும், தன்னைக்காப்பாற்ற யாருமில்லை என்று நெல்மூட்டைகளோடு தன் உடலை புதைத்துக் கொள்வாள்.

அன்று இரண்டாம் தவணையாக அவனுக்கு இருபதாயிரம் ரூபாய் அடிபட்டகாசு கோர்டுமூலம் வந்திருந்தது. காலையிலேயே அவன் குடிகார நண்பர்கள் வந்து அவனை குளிப்பாட்டி தூக்கி வைத்து விட்டு போனார்கள். அன்று காலையிலேயே கடையில் சரக்கு வாங்கி வரச்சொல்லி முடிந்தவரை குடித்தான் மலையாளத்தார் கடை பிரியாணி வந்திருந்தது. போதை சற்று அதிகமானவுடன் மிக சத்தமாக பாடினான் “தலிக்கு மேலே வெல்லம் போனால் ஜானென்ன முலமென்ன” பத்துமணிக்கு ஊர் அடங்கிய பிறகு அவன் மனசு அறுத்தது. அவளை விபச்சாரி என்று பேசியிருக்க கூடாது என்று எண்ணினான். தப்பு பண்ணிட்டேன் என்று கத்தி அழுதான். அவளும் வயசு பொண்ணு தானே நம்மளால ஒன்னும் முடியல ஆனால் அவளை ஏன் மனம் பிறருக்கு தர மறுக்கிறது என்று எண்ணியபடி தன் நிலையை எண்ணி நொந்துகொண்டான். அவள் இருந்தால் தன்னைப் பார்த்துக் கொள்வாள் குளிப்பாட்டுவாள் துணிமணிகளை துவைத்துப்போடுவாள் என்று ஒருகணம் நினைத்தான். மறுகணம் நம்மோடு சேர்ந்து இந்த துன்பத்தை அவள் ஏன் அனுபவிக்க வேண்டும் அவளாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணினான். இறுதியாக, இல்லை இவை எல்லாவற்றுக்கும் காரணம் நாம் உயிரோடு இருப்பது மட்டும்தான் என்று நினைத்தான். அவன் என்றோ செத்துப்போயிருப்பான். அவன் உயிரோடு இருப்பதற்கு காரணம் கேசில் இருந்து காசு வந்ததும் தள்ளுவண்டியில் அமர்ந்து கைகளால் வண்டியை உருட்டிக்கொண்டு தியேட்டரைச்சுற்றி வரவேண்டும். என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது. எறும்பு அரித்த கால்களைப் நினைத்த போது மூணு வருஷமா குப்பையிலே கிடக்கிறேன், கூப்பிடுகிறேன், ஒருமுறை மல்லாந்து படுத்து மோட்டுவளையை பார்க்க வேண்டும் என்ற குறைந்தபட்ச ஆசையும் நிறைவேறாது. அது சாத்தியமில்லை என உணர்ந்தான்.  அவளோடு நெருங்கியிருந்தது முதல் அவளை வேசி என்று திட்டியதுவரை நினைத்துக் கொண்டே கண்களில் நீர் வழிய அவன் கைகள் கூரையில் சொருகி இருந்த எலி விஷத்தை தேடி எடுத்தது.

நீண்ட பெருமூச்சோடு கண்களில் கண்ணீர் வழிய மீதம் இருந்த சரக்கை ஒரே வாயில் குடித்தான். பின் அதே டம்ளரில் மருந்தை கொட்டிக்கலக்கிக் குடித்தான் தடித்திருந்த அவன் நாக்கிற்கு  இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் வெட்டி,வெட்டி இழுத்து வாயில் நுரை தள்ளி படுக்கையிலிருந்து சரிந்து கிடந்தான்.

தப்போசையும், வெடிச்சத்தமும் விண்ணைப்பிளக்க மலர்த்தோரணங்கள் சத்தத்திற்கு ஏற்ப ஆடியபடி, சுடுகாடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் மல்லாக்கப்படுத்து வானத்தைப் பார்த்தபடி.

 

..............................................................................................................


நொங்கு வண்டி

நொங்கு வண்டி

 

V.S. Selvan

 

பொழுது விடிந்திருந்ததுவாசலில் சாணி கரைத்துத் தெளிக்கும் சத்தம் கேட்டது. தூக்கி சொருகிய பாவாடையுடன் இடதுகால் பாதத்தை தூக்கி பெரிய குண்டானை கால்முட்டிக்கு மேல்  வைத்து இடது கையால் குண்டானை வளைத்து அணைத்துக்கொண்டு வலது கையில் சளக்,சளக்என சாணியைத் வாசலில் தெளித்துக் கொண்டிருந்தாள் அவன் அக்காஅவள் கைவளையல் குண்டானின் மேல் விளிம்பில் பட்டுப் பட்டு அந்த சளக் சளக் சத்ததிற்கு தாளமாக சேர்ந்து இசையாக ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் வாசலின் ஓரத்திலிருந்து சாணியைத் தெளித்தபடி இடுப்பைச் சுழற்றி அரைவட்டமாகத் வந்திருந்தாள். பின் ஒவ்வொரு அரைவட்டமாகத் தெளித்து வாசலை பசுமை நிறச்சாணியால் நிறைத்துக் கொண்டிருந்தாள். திண்ணையில் படுத்திருந்த அவனுக்கு சாணியின் நெடி மூக்கில் ஏறி மூடியிருந்த கண்களைப் பிளந்து கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைத் தேடினான். அவர் வெள்ளனவே எழுந்து போயிருந்தார். தலையில் இருந்த தலவாணி காலில் கிடந்தது டவுசர்வார் தோளிலிருந்து கழன்று கிடந்தது. எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் அக்காள் கட்டை விளக்கமாறால் வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தாள். திடீரெனப் பொறிதட்டியது போல் எழுந்து வீட்டிற்கு வெளியே இருந்த லைட்டுமரத்தை நோக்கி ஓடினான். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நொங்குவண்டி லைட்டு மரத்தின் மேல் சாய்த்து கொண்டிருந்ததுசிறிய புன்னகையுடன் அதை நெருங்கிப் பார்க்கையில் அதன்மேல் சாணி தெளிக்கப்பட்டிருந்தைக் கண்டு ஏந்த ஏ இதுமேல சாணிய தெளிச்ச என்று அழுது சிணுங்கினான். அதற்கு அவள் ஆமா பெரிய்ய்ய மோட்டார் வண்டிஎன்றாள். அவனுக்கு ஆத்திரமாக வந்ததுஅந்த வண்டியைச் செய்வதற்கு அவன் அரும்பாடு பட்டிருந்தான். மணியார் கொல்லையில் நொங்கு வெட்டிய போது அதைத் தூக்கிச் செல்லும் சேகர் அண்ணன் பின்னாலேயே சென்றான். அவர் நொங்கு கொத்துகளை பெரிய கேரியர் உள்ள லோடு சைக்கிளில் பக்கத்திற்கு ஒன்றாகக் கட்டி மண்ரோட்டில் மெதுவாக உருட்டி ரோடுவந்ததும்மூணு உந்து உந்தி சைக்கிளை ஏறி மிதித்து ஓட்டினார். அவன் சைக்கிளை விரட்டி ஓடினார். மணியார் கேணியைத் தாண்டியதும் தார் ரோடு சரியான இறக்கம் எனவே வண்டி விர்ர்ர் என்று சீறி ஓடியது. இவனால் அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லைநாயிரைப்பு இரைத்தது. எனவே அவன் ரோட்டுக்குக் குறுக்காகப் பாய்ந்து நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளைத்தாண்டி குறுக்கு வழியில் ஹலிபுல்லா வயலைத்தாண்டி ஓடினான். நாற்று போடுவதற்காக நெல் வயல்களெல்லாம் தண்ணீர் கட்டி வைத்திருந்தனர். வளர வளரப் போடுவதற்கு ஏதுவாக அவன் டௌசர் காக்கி மோட்டாத் துணியில் தைக்கப்பட்டிருந்தது, அது கழண்டு விழாமல் இருப்பதற்காக வயிற்றிலிருந்து முதுகுவரை பின்னால் பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. வயிற்றிற்கும் டெளசருக்கும் இடையே இருக்கும் அரைசாண் இடைவெளியில் காற்று நுழைந்து சென்று கொண்டிருந்தது. நடவுக்காக வரப்புகள் செங்குத்தாக நேர்க்கோடு போட்டது போல் வெட்டப்பட்டுக் களைகளும், களிமண்ணும் வரப்பின் மேல் கொட்டப்பட்டிருந்தன. வேகமாக ஓடிக்கொண்டிருந்த அவனது கால்கள்  அவற்றில் பட்ட உடன் கால்கள் வழுக்கிச் சென்றன, ஒருவாறாக அவன் உடலை வளைத்து,  நிமிர்த்தி கீழே விழுந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் போது, வரப்பின் ஓரமாக வளர்ந்திருந்த நாயுறுவி சடேர் என காலில் அடிக்கவும், அதனால் கால் இடறி வரப்பில் கொட்டப்பட்டிருந்த களைச்செடியில் கால்வைக்கவும், அதிலிருந்த கழுதைமுள் சுரீர் என்று உள்ளங்காலில் குத்தவும், முள்ளைப் பிடுங்க காலைத்தூக்கும் போது, வரப்புச்சகதியில் வழுக்கி, தடுமாறி வயல் சேற்றில் விழுந்தான். மூஞ்சி மொகரையெல்லாம் கொழ, கொழவென சேறு ஒட்டிக்கொண்டது. நடவுக்கு அடியுரமாக அடிக்கப்பட்டிருந்த பொட்டாஷ் வாடை சேற்றிலிருந்து மேலெல்லாம் பரவியது, கைகளை ஊன்றி எழ முயற்சித்தான் முழங்கால் அளவு சேற்றிலிருந்து கால்களைப் பிடுங்கமுடியவில்லை. கைகளை வீசி; கால்களில் சேற்றை அழுத்தாமல்; பூ மீது நடப்பதைப்போன்று மெதுவாக நடந்து கரையேறினான். களத்துமேட்டை ஒட்டிய வாய்க்காலில் புதாற்றிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வாய்க்காலில் சென்று சேற்றைக் கழுவிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் வீட்டில் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டே வாய்க்காலை நோக்கி ஓடினான். வாய்க்காலில் பூவரச மரத்தை ஒட்டி சின்ன மடுவு இருக்கும், அங்குதான் வயலில் வேலை முடிந்து மண்வெட்டி, ஏர்கலப்பைகளை கழுவி சுத்தம் செய்வார்கள், அந்த மரநிழலில் அமர்ந்துதான் கஞ்சி குடிப்பார்கள். தூக்குச் சட்டிகள் மரத்தில் தொங்கியபடி இருக்கும். வாய்க்காலின் மேற்குப் பக்கம் பறக்கும் பாப்பாத்திகள் போல் மூன்று இதழ்களோடு ஆராகீரைகள் மண்டிக்கிடக்கும் அந்தச் சேற்றில் காலைவிட்டால் கிழங்கின் அழுகல்நாற்றம்  கக்கூசில் காலைவிட்டது போல் இருக்கும்,  ஆனால் கிழக்குப் பக்கம் மணல்சாரி, நேவுமணலுடன் கால்வைக்க மெத்து மெத்தென்று இருக்கும், அவன் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கைகளை மேலே தூக்கிக்கொண்டு தண்ணீரை இரண்டு கைகளாலும் விலக்கி மிதந்துவரும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தி தண்ணீரில் மூழ்கினான். சகதி உடலிலிருந்து பெயர்ந்து தண்ணீரில் கரைந்து சென்றது, மூன்று முறை மூழ்கி எழுந்த பின் அருகில் கிடந்த வைக்கோல் பிரியெடுத்து சோப்பு வடிவில் சுருட்டி மீதம் ஒட்டியிருக்கும் சகதியை தேய்த்து சுத்தப்படுத்தினான். அவன் குளித்துக் கரையேறிய போது தார் உருண்டையைத்  தண்ணீரில் நனைத்து எடுத்ததைப் போல மினுமினுப்புடன் காணப்பட்டான். டவுசரின் வார் தோளில் அழுத்தியது, அவன் டவுசர் பாக்கெட்டுகளில் நேற்று விளையாடி ஜெயித்திருந்த புளியங்கொட்டைகள் சகதியேடு கலந்து கனத்து போய் இருந்தன. கையை விட்டு அள்ளி வெளியே எறியலாம் என நினைக்கும் போது விளையாட்டில் ஜெயித்த காயை தூக்கியெறிந்தால் ராசி ஒட்டாது என்று யாரோ கூறிய வார்த்தை நினைவுக்கு வரவே, தூக்கியெறியாமல் விரைந்து ஓடி நால்ரோட்டை அடைந்தான்.

 சேகர் நொங்குகளை உதிர்த்து மலைபோல் குவித்திருந்தார் உதிர்க்காத நொங்கின் கொத்தை எடுத்துப்போட்டு அதன்மீது பின்பக்கம் அழுத்தாமலிருக்க துண்டை  மடித்துப்போட்டு அதன் மீது உட்கார்ந்து நொங்குகளை வெட்டி சொளைகளை அருவாளின் மூக்கைக்கொண்டு நோண்டி படகுபோல் கட்டப்பட்டிருந்த அந்த பனமட்டைக்கலனில் போட்டார் அவரின் அருவாள் அரைவட்டத்தில் நிலவைப்போல் கூர்மையுடன் இருந்தது அவர் வெட்டிப்போட வெட்டிப்போட நொங்கு சொளைகள் ஜிலேபி கெண்டைகள் போல் வழுக்கி, வழுக்கி விழுந்து கொண்டிருந்தன.

 

அவன் ஓரமாக சேகரின் பார்வை படுமாறு நின்றான் “ஏண்டா எம் பின்னாடியே வர்ர” என்றார் சேகர் அண்ணே நொங்கு வண்டி என்று இழுத்தான். இரு இரு உங்க அம்மா வரட்டும் என்றார் சேகர். அவனுக்கு குலையெல்லாம் நடுங்கிப் போனது, பேசாமல் நின்று கொண்டான். சேகரின் உடல் முழுவதும் கொட்டும்  வியர்வையில் சூரிய ஒளி பட்டு ஆரஞ்சு நிறமாக மிண்ணினார் அப்போது மேலத்தெரு ஐயா சைக்கிளில் வந்து இரண்டு ரூபாய்க்கு கட்டு என்று ஏர்உழும் படம்போட்ட ஐந்து ஐந்து ரூபாயை நீட்டினார், சில்லர இல்லையே காலை வியாபாரம் என்றார் சேகர், சரி,சரி கொண்டாங்க என்று அந்த ஐந்து ரூபாயை வாங்கி அவனைப் பார்த்து “டேய் கள்ளு கடையில போயி நான் சொன்னேன்னு அஞ்சு ரூபாய்க்கு சில்லர மாத்திட்டு வா” என்றார் செல்வம். அதிர்ந்து போனான் அவன். கள்ளுக்கடை பக்கம் இவனை யாராவது பார்த்தால் அவ்வளவுதான், இருந்தாலும் வேறு வழியில்லை ஐந்து ரூபாவை வாங்கிக்கொண்டு மெதுவாக வேலிக்கருவை முள்ளில் மறைந்து மறைந்து கள்ளுக்கடை வாசலை அடைந்தான். அங்கு அவன் பக்கத்து வீட்டுக்காரர் கலையத்தில் கள்ளை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொண்டான். கள்ளுக்கடைக்குள் பெரிய பெரிய பானைகளில் கள் உற்றப்பட்டிருந்த்தால் நெடி அந்தப் பகுதி முழுவதும் வீசியது கள்ளுக்கடைக்கு எதிரே தள்ளுவண்டியில் மீன் கருவாடு நத்தை ஊறுகாய் போன்றவற்றை மீனா அக்காள் விற்றுக் கொண்டிருந்தாள் அவளை அனைவரும் சாக்கனாங்கடை மீனா என்றே அழைப்பார்கள் அவளிடம் மறைந்து மறைந்து சென்று அவன் “அக்கா சேகர் அண்ணன் சில்ர மாத்தியார சொன்னாரு” என்றான் “சில்ர மாத்த கள்ளுகடக்கி பச்ச புள்ளைய அனுபியிருக்கான் பாரு” என் திட்டிக்கொண்டே ட்ராக்டரில் ஏர் உழும் ஐந்து ரூபாய் பணத்தை வாங்கி அவளது கல்லாப்பெட்டியான ஜவ்வுத்தாள் அடியில் மற்ற பணங்களோடு வைத்து மூடினாள் பின் இடுப்பில் இருந்த சுருக்குப் பையில் இருந்து இரண்டு ஐம்பது  பைசாக்களும் நாலு காலணாக்களும் எண்ணைக்கப்பல் படம் போட்ட மூன்று ஒருரூபாய் நோட்டுகளையும் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு அவன் ஒளிந்து, ஒளிந்து ஓடி அதை சேகரிடம் சென்று கொடுத்தான் அவர். மீதிச்சில்லரையையும் பணமட்டையால் கட்டப்பட்ட நுங்கையும் மேலத்தெருக்காரரிடம்  கொடுத்து கொடுத்துவிட்டு இவன் பக்கம் திரும்பினார். அவன் செய்த உதவிக்கு கைமாறு செய்யப்போவதை அவர் முகம்காட்டியது அவன் நெஞ்சிக்குள் மகிழ்ச்சி ரேகைகள் துடிக்க ஆரம்பித்தன. சேகர் அவனிடம் திரும்பி “டேய் அதோ அங்க இருக்கிற கள்ளு நொங்க எடு” என்றார் அவன் கொத்தனார் சொல்லுக்குக் கட்டுப்படும் நல்ல சித்தாள் போல் விரைந்து அங்கு மலைபோல் கொட்டப்பட்டிருந்த நுங்குகளின் மேல் காலை வைத்தான் அவை சடசடவென உருள ஆரம்பித்தன டேய் டேய் பார்த்து என்றார், அவர் பின் ஒரு வழியாக நல்ல உருண்டையான நொங்கைப் பார்த்து எடுத்து அவரிடம் கொடுத்தான். அவர் அதை கையில் எடுத்து கண்மட்டத்தில் வைத்துப் பார்த்தார். பின் பந்தைத் தூக்கிப் பிடிப்பது போல் இடக்கையில் தூக்கிப்போட்டு உருட்டி சரியான இடத்தைக் கண்டுகொண்டதும் அதிலிருந்து மேல்புறத்தில் அரிவாளால் சீவி,சீவி சமப்படுத்தித் தட்டையாக்கினார். பின் தூக்கிப்போட்டுப் பிடித்து கீழ்ப்புறத்திலும் திருப்பி ஒரே அளவாக செய்து கோள வடிவத்தை உருளை வடிவில் மாற்றினார் அவர் அரிவாளைக்கொண்டு சீவ,சீவ, இருவர் மனங்களிலும் நொங்கு வண்டி உருண்டு கொண்டிருத்தது. அவர் அவன் பக்கம் திரும்பி “டேய் பட்ட போடணுமா டா” என்றார், அவன் ஆமாண்ணே என்றான். அவர் நொங்கின் வளைவான மேல்புறத்தில் ஒத்த அளவில் சிறுசிறு கோடுகளாகத் தெரியுமாறு நார்களை உரித்து உரித்து கோடுகளாக மாற்றினார். நொங்கு இப்போது வரி வரியாக புலிக்குட்டி போல மாறியிருந்தது அதற்குள் மற்றொருவர் நொங்கு வாங்க வந்தவுடன் இவனிடம்  அதைக் கொடுத்து விட்டு அவரை நோக்கி சிரிக்க ஆரம்பித்தார், அவன் அதை வாங்கி கொண்டு காளைமாடு முட்டுவதற்கு முன் முன்னங்காலை மடக்கி ஒற்றைக் கொம்பை ஒரு சொடுக்கு சொடுக்குமே அதைப்போல ஒற்றைக் காலால் சொடுக்கி, சொடுக்கி நடன ஓட்டத்தில் சென்றான். அவன் தெருவில் அவனிடம் மட்டும்தான் நொங்கு வண்டி இருக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் வீட்டை அடைந்த்தான். அவன் அப்பா வீட்டுக்கு வெளியே தெருவின் ஓரத்தில் குதிகாலில் உட்கார்ந்துகொண்டு வலது கையில் பிளேடை வைத்து வாயில் காற்றை நிறைத்து கன்னத்தை பலூன் மாதிரி செய்து சவரம் செய்து கொண்டிருந்தார் அவர் அவ்வாறு செய்வது தவளை மூச்சுவிடும்போது கழுத்தில் உப்பி, உப்பி வருமே அதுபோல் இருந்தது. முகத்தில் பாதி மழிக்கப்பட்ட முடியுடன் கண்ணாடியில் தெரியும் அவர்முகம் பாதி வயதாகியும் பாதி இளைஞனாகவும் தெரிந்தார். செதுக்கிய நொங்கை அவரிடம் நீட்டினான் அவர் சிரித்து அதை வாங்கிப் பார்த்துவிட்டு “இரு வரேன்” என்று சவரத்தை முடித்தவுடன் வீட்டினுள் இருக்கும் அவள் அக்காவை நோக்கி “அம்மா அந்த அருவாளை எடுத்துகிட்டு வா” என்று சத்தமாக கூறினார். அவளது அக்கா அரிவாளை எடுத்துக் கொண்டு எடுத்து வந்து அவரிடம் கொடுத்த போது வரியிடப்பட்டிருந்த நொங்கை கவனித்து “இது ஒன்னுதான் கொறைச்சல்” என்று கூறிவிட்டு அதன் மீது ஒரு அடி அடித்து விட்டு ஓடிப்போனாள். 

  அப்பாவும் அவனும் ஆற்றங்கரை நோக்கி நடந்தார்கள். கரைபுரண்டோடும் அந்த ஆனந்தக்காவேரி வாய்க்கால் ஓரத்தில்நின்றிருந்த மூங்கில் குத்துகளில் வண்டிக்கு பொருத்தமான மெல்லிய கணுவுள்ள, ஒன்றுக்கொன்று செங்குத்தாக வளர்ந்துள்ள  குச்சியைத் தேடி தேர்வு செய்தனர். அதை அவர் வெட்டி தேவையற்றவற்றைக் கழித்து அவனது பிஞ்சு கைகளில் கிழித்து விடாமல் இருக்க அந்தக்குச்சு முழுவதும் சவரம் செய்வது போல் மூங்கிலை அரிவாளால் மெதுவாக சுரண்டி அவனிடம் கொடுத்தார். பளப்பளப்புடன் காணப்பட்ட அந்தக்குச்சியை அவன் ஏர்க்கலப்பை எடுத்துச் செல்பவர்கள் போல அதைத் தோளில் வைத்துக் கொண்டான். அவன் அப்பா ஓரத்தில் விளைந்திருந்த காத்தாடி முள் மரத்தில் மூன்று பெரிய முள்ளை அரிவாளால் வெட்டி தலை முண்டாசில் பத்திரப்படுத்திக் கொண்டார். வீட்டுக்குச் சென்றதும் “டப,டப வேணுமா டா” என்றார் அதற்கு அவன் “ரொம்ப சத்தம் போடுற மாதிரி வேணும்” என்றான் அப்போது தெருவின் ஓரத்தில் பதனி விற்கும் தாத்தா பவுனி... பவுனி...., என்று கரகரத்தக்குரலில் கூவிக்கொண்டு வந்தார். அவர் தோல் சுருங்கி எலும்பின் மேல் படிந்துருந்தது.  அவர் வேட்டியை மடித்து சுருட்டி கோமணம் போல் எடுத்துக்கட்டி இருந்தார். முறுக்கிய மீசையுடன் பஞ்சு போன்ற வெள்ளை மயிர்கள் வெற்றிலைக் கறைப்பட்டு அவர் வாயோரம்  வரமிளகாய் வண்ணத்தில் இருந்தது. அவர் தலையைச் சுற்றியிருந்த முண்டாசிலிருந்து புகையிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவர் பதனீர் பானைகளை நீண்ட மூங்கில் கம்பில் இரு ஓரங்களில் தராசு போல் கட்டி  மூங்கிலின் நடுப்பகுதியை தோளில் வைத்துத் தூக்கிவருவார். அவ்விரண்டு பானைகளும் மேலும் கீழும் அசைந்து அவரோடு நடனம் இட்டுக் கொண்டே வரும். அப்பா அவனிடம் “பவுனி குடிக்கிறியாடா” என்றார். அவன் ஆமாம் என்றான். அவனிடம் இடுப்பில் சொருகி இருந்த அருங்கோண வடிவில் இருந்த இருபது பைசாவை கொடுத்து அனுப்பினார். அவன் பவுனி தாத்தாவிடம் கொடுக்க அவரும் படகு போலிருந்த பனமட்டை நிறைய பவுனியை ஊற்றினர். அவன் குடிக்க குடிக்க வயிற்றுக்கும் அவன் டவுசருக்கும் உள்ள இடைவெளி சுருங்கிக்கொண்டே வந்தது. அதற்குள் அவன் அப்பா பேப்பரை மடித்து நுங்கின் உயரத்தை அளந்து மடித்து அதன் மேல் சுற்றி பேப்பரின் மேல் காத்தாடி முள்ளை குத்தி இருந்தார். அவன் நொங்கின் மையத்தில் மூங்கில் குச்சியை சொருகி உருட்டவும் “டப் டப் டப்” என மோட்டார் சைக்கிள் போல் சத்தமிட்டு உருண்டு சென்றது. அன்று தெரு முழுவதும் ஓய்வில்லாமல் “டப,டப” சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. 

 அவன் அக்கா அந்த நொங்கு வண்டியின் மேல்தான் சாணியை தெளித்து இருந்தாள். நொங்கு வண்டி சற்று காய்ந்து போயிருந்தது, காத்தாடி முள் கொளகொளத்துப்போய் போய் ஓரமாக ஒதுங்கியிருந்தது. பழைய சத்தம் வரவில்லை. நொங்குவண்டி சுருங்கியதாலும் மையத்துளை சுழன்று,சுழன்று அகன்றிருந்த்தால் நொங்கு வண்டி சுழலாமல் அப்படியே தேய்ந்து கொண்டு சென்றது. காத்தாடி முள்ளைப் பிடுங்கி அட்டையில் வேறு இடத்தில் குத்தி பார்த்தான். சரிபட்டு வரவில்லை.  இனிமேல் வண்டி ஓடாது எனத்தெரிந்த்ததும் மூங்கில் குச்சியைப் பிடுங்கி வீட்டின் தாழ்வாரத்தில் சொறுகிவிட்டு காத்தாடி முள்ளை எடுத்து பேப்பரில் மடித்து பத்திரப்படுத்திக்கொண்டு அரிவாளைத் தேடி எடுத்து அடுக்குப்பானை அருகில் மறைத்துவிட்டு விரைவாக வெளியே ஓடினான்.

 

 

..........................................................................................................


எண்களைச் சுமந்த வண்டி




எண்களைச் சுமந்த வண்டி

V.S. Selvan.

ண்டவாளங்கள் ஆவியாகிக் கொண்டிருந்தன. அந்த இரயில் நிலையத்தின் இடது ஓரத்தில் புங்கமர நிழலில் செந்தில் செல்வன் நின்று கொண்டிருந்தான். பெயர் சற்றுப் பெரிதுதான், அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. முதலில் பிறந்தவை இரண்டும் பெண்ணாகப் போனதால் தனக்குக் கொள்ளிவைக்க ஆண் இல்லையே என அவன் பெற்றோர்கள் கலங்கியதன் காரணமாக யாரோ ஒரு பூசாரி வாக்குக்குக் கட்டுப்பட்டு பல ஊர்களில் பிச்சை எடுத்து பழனிக்குக் கால் நடையாகச் சென்று நேர்த்திக்கடன் முடித்து மலையடிவாரத்தின் கடைசி படியில் கால்வலி போக்க உட்கார்ந்து பழனி ஒரிஜினல் சித்தநாதன் பஞ்சாமிர்தத்தை உண்டதனால் அதன் சுவையில் பணப்பிரச்சனைகளும் இரண்டு பெண்பிள்ளைகளை வளர்க்கவேண்டிய பொறுப்பும் சற்று மறக்கடிக்கப்பட்ட நிலையில் தோன்றிய அதீத வேகத்தில் பிறந்த ஞானக் குழந்தை

அந்த ஞானக் குழந்தை பிறந்தவுடன், அனைத்து சொத்துக்களும் இன்பங்களும்  பறிபோனபின் ஆண்டி கோயிலுக்கு போனால்  கோமணத்தை தவிர ஒன்றும் மிஞ்சாது  என்று பலர் சொன்னார்கள்.  அதற்காக அனைத்தும் திரும்பிச் செல்ல ரிட்டன் வாபஸ் என்று கூறினால் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுமா என்ன?   கஷ்ட ஜீவனம் என்று ஒன்று சொல்வார்களே; அது இப்படித்தான் இருக்கும் எனப் பலர் உதாரணம் காட்டும் அளவிற்கு முருகனின் அருள் நிறைந்திருந்தது.

 மூன்று மணிக்கு வர வேண்டிய மெயில் இன்னும் வரவில்லை. பன்னிரண்டு ஒரு மணிக்கெல்லாம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து நின்றுகொண்டு மூன்று மணி  ரயிலைச் சபிப்பது சரியல்ல என்பது மனதுக்குப்பட்டாலும் மன வெறுப்பை எவ்வாறு தான் காட்டிக்கொள்வது.
ஞானஒளி படம் பார்த்திருந்தீர்களானால் பூதலூர் இரயில்வே ஸ்டேஷன் என போர்டில் எழுதியிருக்கும் காட்சி இருக்குமல்லவா, அதே இடத்தில் தான் அவன் நின்று கொண்டிருந்தான். பூதலூர் இரயிவே ஸ்டேஷன் சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களுக்கும் மையம்.  இந்த இரயில்வே ஸ்டேஷனை  மிதிக்காமல் யாரும் முன்னேறியிருக்க முடியாது. அக்கிராஹாரத்து அய்யர்களுக்காக இரயில்வே ஸ்டேஷன் கட்டி இரயிலை அவர்களே ஓட்டிவந்தார்கள் எனச் சொல்லுவார்கள். இந்த ஸ்டேஷனிலிருந்து  கிழக்கு மேற்காக விரிந்து செல்லும் தண்டவாளங்கள் தஞ்சாவூரையும் திருச்சியையும் இணைத்துச் சென்றன.

இதயம் சற்று வேகமாகத்தான் துடித்தது உண்டு இல்லாட்டி இல்ல என்பது வண்டி வந்தா தெரிஞ்சிரும் என  மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். இவன் படிப்பதில் அவன் அம்மாவிற்கு சிறிதும் விருப்பமில்லை. அவளுடைய வாழ்க்கையை இவன் பிறப்பு எதிர்த்திசையில் கொண்டு சென்றதால் உன்ன ஒத்த பசங்க எப்படி குடும்பத்த காப்பாத்த வேலைக்கு போறாங்க நீ படிச்சு என்ன ஆகப்போகுது பேசாம ஏதாவது ஒரு வேலைக்கு போயி குடும்பத்தைக் காப்பாத்துற எண்ணம் இல்லையே என ஒரு நாளைக்கு நூறு  முறையாவது கூறிவிடுவார். அவன் அப்பாவோ சும்மா இருடி  அவனாச்சும் படிச்சு மேல வரட்டும்  என்பார். அவன் நாக்கு வறண்டு போனதாக உணர்ந்தான். நேற்று அடித்த கொடுக்காப்புளி அவன் காக்கி டவுசரில் இருந்தது. டவுசரில் கைவிட்டு அதை எடுத்துத் தோல் நீக்கி வாயில் போட்டுக்கொண்டான். வாயை அகலவாக்கில் திறந்து கனகனக்கும் அதன் துவர்ப்பை இருமிச் சரிசெய்தான். நெஞ்சுப்பகுதி பாறாங்கல்லாய் கனத்தது. கண்ணெதிரே தெரியும் பசுமையான வயல்கள் எல்லாம் பழுப்படைந்து பூச்சிவெட்டு விழுந்ததைப் போல அவன் கண்களுக்குத் தென்பட்டன. கைகாட்டிகள் அசைவற்று காணப்பட்டன. வண்டி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. புகை ஏதும் தொடுவானத்தில் தெரிகிறதா எனப் ர்த்தான். நாரைகள்தான் முக்கோணவரிசைகட்டி பறந்து கொண்டிருந்தன. பலமுறை கேட்டாகிவிட்டது, மூன்று மணி ரயில்  நாலு மணிக்குத்தான் வரும் என்று அவர் கூறிவிட்டார். இருந்தாலும் மெதுவாக நடந்து அவர் அறையை எட்டிப்பார்த்தான். ஸ்டேஷன் மாஸ்டர் தன் இரண்டு கால்களையும் மேஜை மீது தூக்கிவைத்துக்கொண்டு கண்ணில் துணியை கட்டிக்கொண்டு டெலிபோனில் முனையை  கழுத்தில் வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். வெளியே சிவப்பு பெயிண்ட் அடித்த   தீ வாளிகளுக்கு அருகில், சட்டை காலரில் அழுக்கு ஒட்டாமல் சற்று மேலே தூக்கி வைத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி கர்ச்சிப் சொருகி தோ ஒரு நாளிதழை விசிறியாக்கி விசிறிக் கொண்டிருந்தார் கைகாட்டி தூக்குபவர். மீண்டும் வண்டி எப்ப வரும் எனக் கேட்டால் நிச்சயமாகக் கோபப்படுவார் என உணர்ந்து, அவரைக் கண்டு கொள்ளாது நடந்து அதே மரத்தடிக்கு வந்தான். வீட்டிலிருந்து அந்த ரயில் நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும். ரயில் நிலையத்தை அனைவரும் ரயிலடி என்றே சொல்வார்கள். இந்த இரயில் நிலையம் அவனுக்குப் பலவற்றைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. B..U..D..A..L..U..R..என எழுத்துக் கூட்டி ஆங்கிலம் படித்தது, STATION MASTER எனச் சேர்த்துப்படித்தது, சற்றுவளர்ந்ததும் Broad gauge, Meter gauge என அறிந்துகொண்டது. ஊரின் பெயர் பெரிதாக எழுதப்பட்டிருக்கும் மஞ்சள்போர்டின் ஓரத்தில் சிறிய அளவில் எழுதப்பட்டிருக்கும் MSL என்பது என்ன என அறிந்து கொள்ள அறிவாளி அண்ணன் ஜாகீர் அப்பாவிடம் போய் விளக்கம் கேட்டது எனப் பலவற்றை இந்த ரயில்வே ஸ்டேஷன் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

வழக்கமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு அக்கிரஹாரத்தில் இருந்து வருபவர்கள் கூட்டு வண்டிகளில் வருவார்கள். மற்றையோர் சைக்கிளிலும், நடந்தும் வருவார்கள், ஸ்டேஷனுக்கு வெளியே இருக்கும் பெரிய ஆலமரத்தின் அடியில் கூட்டு வண்டிக்காரர்கள் ஓரமாகப் படுத்திருப்பார்கள். ஆலமரத்துப்பட்சிகள் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் தாங்கள் உண்ட கடன்களை எப்போதும் முடித்துக்கொண்டே இருக்கும். இரயில்வே ஸ்டேஷனின் இருபுறமும் இரும்புத் தண்டவாளங்களை ஒரே அளவாக அறுத்து செங்குத்தாக நிறுத்தித் தடுப்புவேலிகள் அமைத்திருந்தனர். ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளுக்கு இடையில் பார்க்கும் பொழுது ஆங்கிலேயர் கட்டிய ரயில் நிலையம் மிக அழகாகத் தெரியும். இரயில்வே ஸ்டேஷனுக்கு வழக்கமாக நடந்துதான் வருவான். இன்று அவன் ஓசி சைக்களில் டபுள் பெடல் போட்டு ஏறி வந்ததால் விரைவாக வந்து சேர்ந்துவிட்டான். அவன் நின்றிருந்த புங்கமரத்தடியில் இருந்து இரும்புத் தண்டவாளத் தடுப்புவேலிக் கம்பிகளுக்கு இடையே தலைவிட்டு அவன் வகுப்புத் தோழர்கள் யாராவது வந்திருக்கிறார்களா எனப் பார்த்தான். யாரும் வந்ததாகத் தெரியவில்லை. பகல்நேரப் பேரமைதியில் பட்சிகள்மட்டுமே பேசிக்கொண்டிருந்தன. ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி மேற்குப் புறத்தில் ரயில்வே கேட்டை ஒட்டிய சேட்டு கடையில்அல்லாவை நாம் தொழுதால்என நாகூர் ஹனிபா குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்தார். அவனுக்கு விபரம் தெரிந்து அந்த சேட்டுக்கடை எப்பொழுதும் பூட்டியதே இல்லை அதற்குக் கதவுகளும் இல்லை எப்பொழுதும் கொதித்துக் கொண்டிருக்கும் பால் அண்டா எப்பொழுதாவது கழுவப்பட்டு இருக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கும். இருப்பினும் அனைவருக்கும் இரவில் தூக்கம் போக்கும் அற்புத அதி மருந்தாக சேட்டுக்கடை அமையும்.

வயல்களில் களை எடுப்பவர்கள் கரையேறிக் கொண்டிருந்தார்கள். பெரியார் பஸ் ஊரைக் கடக்கும் பொழுது மணி இரண்டு. பஸ்சை கண்டவுடன் பெரியார் பஸ் வந்துவிட்டது பெரியார் பஸ் வந்துவிட்டது என்று கூறி முதலாளியை கேட்காமலேயே அவர்கள் கரையேறுவது வழக்கம். அவன் அம்மா இந்நேரம் கரையேறி இருப்பாள் என நினைத்தான். அவளிடம் தேர்வு முடிவுகள் வருவதைக் கூறினால்நீ எங்க பாசா போறஎன்பாள்.  அவன் அப்பாவோ இவன் பெயிலாகக் கூடும் என்பதைக் கனவிலும் அறியாதவர். இந்த இரு முனைகளுக்குள் அச்சிடப்பட்ட அவன் தேர்வு எண் தோன்றியும் மறைந்தும் அவனுக்கு விளையாட்டு காட்டியது. யாரோ செந்திலு...என்று அழைப்பதைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். தடுப்புவேலிக்கு வெளியே குண்டு அப்பா தன் இரண்டு எருமைகளுடன் நின்றுகொண்டிருந்தார். அவர் அப்பாவின் நண்பர். அவர் பேர்தான் குண்டே ஒழிய அவர் மெலிந்த தேகத்துடன் இடுப்பில் துண்டும் மடியில் வெற்றிலைப் புகையிலையுமாகக் காணப்படுவார். என்னை வியப்பாகப் பார்த்து, என்னப்பா இங்க நிக்கிற என்றார் எனக்குத் தேர்வுமுடிவுகள் வருகிறது எனக் கூறுவதில் சிறு பயம். ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால். சற்று சுதாரித்துக்கொண்டு பேப்பர் வாங்க நிக்கிறேன் என்றான். சரி வா சேட்டுக் கடையில் போண்டா வாங்கித் தர்றேன் என்றார். இல்லப்பா வேண்டாம் என்று அவன் கூறியதும் சரி பாத்துப்போ என்று கூறி எருமைகளை ஓட்டினார். அவை தடுப்பு வேலியோரச் செடி தழைகளை மேய்ந்துகொண்டே சென்றன.

அவன் பள்ளியில் நேற்று கரும்பலகையில் எழுதிப் போட்டிருந்தார்கள். நாளை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று. அதைப் பார்த்ததிலிருந்து அன்ன காரம் ஏதுமின்றி மூன்று மணி ரயிலிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. அந்த மூன்று மணி மெயிலில் தான் மாலை நாளிதழ் வரும். அதில் சைபரில் இருந்து ஒன்பது வரை உள்ள எண்களில்  அந்த ஆறு எண்கள் இருக்கவேண்டும். இந்நேரம் அவை அச்சாகிக் கட்டப்பட்டுப் புகையைக் க்கிக்கொண்டு வரும் மெயில் வண்டியில் ஏற்றப்பட்டுத் தண்டவாள இடைவெளிகளில், தூக்கிப்போட ஆடி ஆடி வந்து கொண்டிருக்கும். யாரோ இவனை அழைப்பதை உணர்ந்து திரும்பினான். அவன் வகுப்பு நண்பர்கள் குமாரும் புலிகேசியும் வந்திருந்தனர்.  இருவர் நெற்றியிலும் விபூதி நிறைந்திருந்ததைக் கண்டதும் அவனுக்குப் பதட்டம் அதிகரித்தது. இன்றையநாளில் சாமி கும்பிடாததை நினைத்து பயமும் சோர்வும் அடைந்தான். ஏதுடா விபூதி என்றான். வர்ற வழியில புள்ளையார் கோயிலுக்கு போயிட்டுவர்றோம். அதான் லேட்டாயிடுச்சு என்றான் குமார். அவனுக்கு மேலும் பதட்டம் அதிகரித்து மெதுவாகக் குரலைத்தாழ்த்தி குற்ற உணர்ச்சியுடன் டேய் நான் இன்னும் சாமி கும்படலடா என்றான். சரி வா என்று இரயில்வே கேட்டை ஒட்டிய சுப்பிரமணியர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். குமார் அப்பா வழக்கமாக சாமியாடுபவர். அந்த பக்தியின் தொடர்பு அவனுக்கு எப்போதும் இருப்பதாகக் கூறிக்கொள்வான். எனவே   எப்போதும் தேங்காய் உடைப்பது, சூடம் பத்தி கொளுத்துவது என அனைத்திலும் கைதேர்ந்தவனாக இருந்தான். சுப்பிரமணியர்கோயில் மிகச்சிறிய கோயில். சித்திரா பெளர்ணமி அன்றைக்கு வெண்ணாற்றில் இருந்து காவடியாடியபடி பால்குடம் எடுத்து அலகு குத்திக்கொண்டு அந்த வேகாத வெயிலில் உருகிக் கிடக்கும் தார்ரோட்டில் நடந்துவருவார்கள். வெப்பத்தால் தகிக்கும் அவர்களின் கால்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதும், வெப்பம் அவர்களின் பாதங்களைத் தாக்காத வண்ணம் ரோடு முழுவதும் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுப் பெண்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவர். குமாரும் நண்பர்களும் வெண்ணாற்றில் குளித்துவிட்டு வளைவுகளுடன் கூடிய பாலத்தின் அடியில் சாமிகள்போடும் மேக்கப்களுக்கு உதவி செய்வதும் பிறகு அலகு குத்தும்போது அரோகரா கோஷம் போடுவதும் உண்டு. அவன் வீட்டில் அன்றைய தினம் விரதம் இருந்து வீடு சாணி மொழுகி, சாம்பிராணி போட்டு, தலைவாழை இலையில் சோறுபடைத்து வழிபடுவார்கள். அவன் அப்பா அன்று பூசாரியாகவே மாறிவிடுவார், இடுப்பில் துண்டுகட்டி தேங்காய்க்கு மஞ்சள் தடவி சாம்பிராணி புகை காட்டி அருவாளால் தேங்காயை நரம்பு பார்த்து அடித்து உடைக்கும்போது அவர் உடலில் முருகனே வந்துவிட்டதைப் போலிருப்பார். அனைவரும் தார் ரோடு நோக்கித் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் புளி தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்ட பித்தளைக் குடங்களில் சாமிமார்களின் கால்களில் தண்ணீர் ஊற்ற நீரைப் பிடித்துக் கொண்டு பக்தியுடன் ட்டையும் தெருவையும் இணைக்கும் புளியமரத்தடியில் கூடுவார்கள். அவன் அம்மா சிறந்த பக்திப் பெண்ணாக இருந்ததாக ஊரார் கூறுவதுண்டு. அவன் பிறப்பின் நற்பலனால் எஞ்சிய ஏமாற்றத்தில் சாமிகள் காலண்டர்களுக்கு மேல் நின்று யாமிருக்க பயமேன் என்று மட்டும் நின்றுகொண்டன. இருப்பினும் வருடத்தில் இந்த ஒரு நாளில் அவன் அம்மாவிற்கு சாமி வந்துவிடும். அவன் அப்பா சொம்பில் தண்ணீரோடு வந்து முருகனுடன் மயிலேறும் அவன் அம்மாவின் முகத்தில் ண்ணீரை அடித்து அவர்கூடவே வைத்துக் கொள்ளுவார். குமாரின் அண்ணன் குட்டாரி தப்பை குழுவோடு சேர்ந்து அடிப்பார். குமார் அப்பா வஸ்தா வாத்தியாரோடு கம்பு சுத்துவார் அவனோ ஈரடவுசருடன் அரோகராவுடன் கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல் என்று வருவான். தப்பு சத்தத்துடன் வரிசையாகக் காவடி, பால்குடம் என வரிசையாகக் கால்களில் நீரைவாங்கிக் கொண்டு  சுப்பிரமணியர்கோயிலுக்கு வந்து  காவடி பால்குடத்தை இறக்கிவிட்டுப் பிறகு இரவில் தீமிதியும், பாட்டுக்கச்சேரியும் நடக்கும். மற்ற நாட்களில் கோயில் திறப்பதே இல்லை. யாராவது வந்து வெளியில் சூடம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டுப் போவார்கள், பிள்ளைத்தாய்ச்சிகள் தாய் வீடு போகும்போது கோயிலின் வெளியில் இருக்கும் வேப்பமரத்தின் இலைகளைப் பறித்துத் தங்கள் தலையில் சொருகிக்கொண்டு சூடம் ஏற்றிச் சாமி கும்பிட்டுவிட்டுச் செல்வர். குமார் சூடத்தைத் தீபெட்டியை உரசிப் ற்றவைத்தான். ஏதுடா சூடம் என்றானவன். வர்ற வழியில வாங்கியாந்தேன். சாமி கும்புடரதுக்குச் சில முறைகள் இருக்கு நீ அதெல்லாம் செய்யமாட்டாய் எனத் தெரியும் என்றான் குமார். குற்ற உணர்ச்சி மேலிட அவன் கைகள் அதுவாகவே இணைந்து வணங்கத்தொடங்கின. அவர்கள் நெற்றியில் இரண்டாம் முறையாக விபூதி ஏறத்தொடங்கியது.

அவர்கள் மெதுவாக நடந்து வந்து ஸ்டேஷன்மாஸ்டரைப் பார்த்தார்கள். அவர் அழுக்காகிப் போயிருந்த வெள்ளை ஆடையைத் தட்டிவிட்டுக்கொண்டே சாப்பட்டுக் கூடையை எடுத்துக் கொண்டிருந்தார். குமார் அவரிடம் மெயில் ஆலக்குடி அவுட் ஆகிரிச்சா என்றான். அவர் பதில் சொல்ல எத்தனிக்கையில் டெலிபோன் ஒலித்தது. அதை எடுத்து அவர் பூதலூர் எஸ்ஸம் கண்ரோல் ஓவர் என எதையோ கூறி அந்த ஆலம்விழுதுகளைக் கொண்டு முறுக்கிக் கட்டப்பட்டது போல் உள்ள மெயில்வண்டி சாவியில் இருந்து தோல்பெல்டால் கட்டப்பட்ட இரும்புக்குண்டை அவிழ்த்து எடுத்து பெரிய பால்கேன் போலிருந்த வெள்ளை இயந்திரத்திற்குள் போட்டு அதன் கீழுள்ள வளைவான கைப்பிடியை இழுத்து அடித்தார். அது கீழுள்ள குழியில் ஒரு இரும்பு முட்டையை இட்டது. அந்த முட்டையை எடுத்து அதேபோல் மெயில்வண்டி சாவியில் கட்டி பாயின்ட்மேனிடம் கொடுத்துவிட்டு ஆடைகளைச் சரிபடுத்தித் தலையைச் சீவிக்கொண்டே கொடிகளை எடுக்கச் சென்றார். மூவரும் பிளாட்பாரத்தைநோக்கி நடக்கத் தொடங்கினர். ஏண்டா பாசாயிறுவோமா என்றான் குமார். நம்பிக்கை இருக்கு என்றான் அவன். நடேசன் வாத்தியார் நடத்தவே இல்லை, இங்கிலீசு டீசச்சர் பேசுனதே புரியல, கணக்கு வாத்தியார் அவருக்கு மட்டுமே கேட்குமாறு பேசி அவரே சிரித்து மணியடித்ததும் சென்றுவிடுவார். அவரைப் பூனை என்றே அழைப்பார்கள். காரணம் கால் உயரமாக பஞ்சு ரப்பர் செருப்பு போட்டு நடப்பது தெரியாமல் மிக மெதுவாக வருவார். யாரிடமும் பேசமாட்டார் சாக்பீஸ் போர்டு இரண்டுகளிடம் மட்டும் பேசிவிட்டுச் சென்று விடுவார். அறிவியல் வாத்தியார் தான் எவ்வளவு அறிவாளி என்று கூறிவிட்டு முடிவில் மற்றவற்றை எல்லாம் படித்துக்கொள்ளுங்கள் என புத்தகத்தை மூடிச் செல்வார். பெரியசாமி தமிழ் வாத்தியார் உயரத்தில் குட்டையாக இருப்பதாலும் தன் பண்டிதப்புலவர் பார்வையில் அனைவரும் தமிழுக்கு நேர்ந்த இழுக்கு என நினைத்து அதன் வேதனையை மாணவர்களைத் தாண்டித்தாண்டி அடித்துத் தீர்த்துக்கொள்வார். ஆனால் பாண்டியன் வாத்தியார் மகன் சுகுமாரைக் கேட்டு சிலவற்றைப் படித்திருந்தான். அவன்தான் சொல்லியிருந்தான் கேள்வி தெரியாவிட்டாலும் எழுதனும் என்று. அதனால் அவன் தெரியாமலே தெரியாததை எழுதியிருந்தான்.

ஸ்டேஷனில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குப்போகும் பெல் தொழிலாளர்கள், கோல்டன் ராக் இரயில்வே தொழிலாளர்கள், திருச்சி காந்தி மார்க்கட்டுக்குச் செல்லும் காய்கறி வியாபாரிகள் போன்ற பலருடன் பேப்பர்காரம்மாவும் கையில் சில புத்தகங்களும் காலை பேப்பர் சிலவற்றுடனும் நின்று கொண்டிருந்தது. பேப்பர் பேப்பர் என்று கூவிக்கொண்டு கனத்த உடலை அசைத்து நடந்து விசிறிக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. அவன் குமாரைப் பார்த்துக் கேட்டான் டேய் உனக்கு நம்பர்பாக்கத் தெரியுமா? என்றான். தினசரி லாட்டரி சீட்டு நம்பரை நான்தானே பார்த்துச் சொல்கிறேன், பேனவாரம்கூட K.A.S. ராமதாஸ் லாட்டரியில் டோனிக்கருக்கு ஆயிரம் ரூபாய் விழுந்ததை நான்தானே கண்டுபிடிச்சேன் எனப் பெருமையாகக் கூறினான். வண்டிவருவதற்கு மணியடித்தது. அந்த மணி ஒலியோடு அவன் நெஞ்சும் படக் படக் என அடிக்க ஆரம்பித்து வண்டி ஓடிவரும் சத்தத்துடன் இணைந்துகொண்டது. கார்டுவேனில் கட்டப்பட்டுக் கிடக்கும் பேப்பர் கட்டில் இவன் நம்பரை மனம் தேடத்தொடங்கியது. பெருத்த இரைச்சலுடன் வண்டி வந்து நின்றும் இவன் பேயறைந்தவன் போலவே நின்றுகொண்டிருந்தான். டேய் வாடா என அவர்கள் கூப்பிட்டதும் தலைதெறிக்க அவர்கள் பின்னால் ஓடினான். கார்டு பேப்பர்கட்டை வெளியே தூக்கி எறிந்து விசிலை வாயில் வைத்துக்கொண்டு கைகாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். கைகாட்டி தூக்கவும் விசிலை ஊதி கொடிகாட்டவும் பேப்பர்காரம்மா வருவதற்கும் சரியாக இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் என்ன ரிசல்டா என்றார். ஆமாம் என்று அழுத்திச் சொல்ல வாய் வரவில்லை, சரி அந்த கட்டைத் தூக்கிக்கொண்டு வா என ஆணையிட்டபடி ஸ்டேஷனின் நுழைவாயிலை நோக்கி நடந்தார். இருப்பினும் ளில்லாவிட்டாலும் அவர் வாய் பேப்பர் பேப்பர் என்று கூவுவதை நிறுத்தவில்லை.

நுழைவாயிலின் அருகே கட்டைப் பிரித்துத் தனித்தனியாக அடுக்கிக்கொண்டு அவர்களைக் கவனிக்காதது மாதிரியே இருந்தார். அவர்களுக்கு அழுகை உள் நெஞ்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. திடீரென நாப்பது பைசாக்கொடு என்று பேப்பரை நீட்டினார். குமார் காசு கொடுத்து  வாங்கிக்கொண்டான். அவனுக்கு அந்த பேப்பர் பயங்கரமாக கனத்தது போல் இருந்தது. அந்த பேப்பரின் நடுப்பகுதியில் பத்தாம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் தொடர்ச்சி என்று இருந்தது. முதல் பகுதியைத் தேடினார்கள் அது இரண்டாம் பக்கத்தின் இறுதியில் இருந்தது. நம்பர் எழுதிவைத்திருந்த துண்டுக் காகித்திதில் 237 எனத்தொடங்கும் எண்களில் 005 (-) சிறுகோடு 008 என்று இருந்தது இடையில் மூன்று நம்பரைக் காணோம் அதில்237 007 எனும் அவனது நம்பரையும் காணோம். அவனுக்கு இருண்டுகொண்டு வந்தது. பல தெய்வ உருவங்களை பேப்பரிலே கொண்டுவந்து தேடினான் அப்போதும் இல்லை, குமாரின் நம்பரும் இல்லை, புலிகேசியின் நம்பரும் இல்லை, வேறு யாரெல்லாம் பாஸ் என்பதை அறிய மனம் விரும்பவில்லை பேப்பரைக் கிழித்தெறிய வேண்டும்போல் இருந்தது. கண்களில் நீர் வடிந்தது. என்னடா யாரும் பாசாகல என்றான். குமார் ஆலமரத்தை வெறித்தவாறு பார்த்து நீ மட்டுந்தான் பாஸ் என்றான். எப்படி என் நம்பரே இல்லையே என்றான் 005 சிலேந்து 008 வரை நாலுபேர் பாஸ் என்றான். எங்கே என்று பேப்பரை வாங்கிப் பார்த்தான். இப்படிக் கோடுபோட்டு காட்டுனா இடையில உள்ள எல்லாரும் பாஸ்னு அர்த்தம் என்றான். அவன் மனம் பட்டாசுபோல் வெடித்தது. இருப்பினும் அவனால் அதை வெளிப்படுத்த இயலவில்லை. மூவரும் சோகமாகவே திரும்பினார்கள். குமார் அவனிடம் பேப்பரைக் கொடுத்துவிட்டு ஏதும்பேசாமல் சென்று விட்டான். அவன் தன் தெருவிற்கு வந்தவுடன் அந்தப் பேப்பரை தங்கவாளைப்போல் உயரத்தூக்கிக்காட்டிநா பாசாயிட்டேன்..பாசாயிட்டேன்..” என்று குதித்தாடிக்கொண்டு சென்றான். வயல் வேலைக்குச்சென்ற அலுப்பில் அசந்து படுத்திருக்கும் அவன் தெருவாசிகள் இவன் குரலைக்கேட்டு ஒருவர்கூட வெளியே வரவில்லை, கடைசியாகக் களையெடுத்த அயர்வில் தூங்கிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்ப பயமாய் இருந்தது அவனுக்கு. மெதுவாக அருகில் சென்று அம்மா நா பாசாயிட்டேன் என்றான். அவள் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்துச் சிறிது புன்னகைத்துத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.



...................................................................................................................
Mobile & whattsup 9486144670